Monday, January 30, 2012

நிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..



முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.

அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..

இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.

உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.

அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார். 

‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.

தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.

வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.

அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது. 


அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.

மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.

இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.

சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.

அது அவருக்கு எப்படித் தெரியும்?

அதை அவன் மட்டுமே அறிவான்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!


கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!


மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!


ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


கோவிலுக்குச் செல்லும் வழி:

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.
 
நம்பினோர் கைவிடப்படார்...!
 
நன்றி : திரு . செங்கோவி .  


Read more: http://www.livingextra.com/2012/01/blog-post_3082.html#ixzz1koSP6dqY

தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்வோம்....!


இததகவலை நம் வாசகர்களுக்காக அனுப்பிவைத்த நண்பர். கோபால கிருஷ்ணனுக்கு நன்றி...

இன்று பல பெரிய பெரிய பல்நாட்டு நிறுவனங்களுக்கு - பயிற்சி அளிக்க வருபவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனரோ, அந்த தகுதிகளை தனது பத்தே வயதில் , சாதித்துக் காட்டிய - இந்த நெல்லை குழந்தைக்கு , அவர் மென்மேலும் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துவோம்... !

நம் வாசகர்களில்  அரசு உயர் மட்டத்தில் இதை எடுத்துச் சொல்ல செல்வாக்கு வாய்ந்தவர்கள் , கொஞ்சம் சிரமேற்கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்...!

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!   
                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) Iஉலக சாதனை..Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.  


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional). 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.



                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும். 



நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!


Read more: 
http://www.livingextra.com/2012/01/blog-post_9918.html#ixzz1koVwcYg5