தியானம் செய்வது எப்படி
தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.
ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.
நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.
அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.
ஆன்மிக குரு ஓஷோ சொல்லுவார் - மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை - என்று.
நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.
நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.
ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.
வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.
எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.
வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.
ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.
அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.
எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.
மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.
எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.
தியானத்திற்கு நிறைய வழி முறைகளை பெரியோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர்.
அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.
எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!
வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.
இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.
நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.
நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.
அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!
வெற்று மனதின் சக்தி அபாரமானது.
No comments:
Post a Comment